கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து படை குவிப்பும், பதற்றமும் நீடித்துவந்தது. படைகளைத் திரும்பப்பெற்று அமைதியை நிலைநாட்ட இருதரப்பிலும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியாக, கடந்த பிப்ரவரியில் நடந்த 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளிலிருந்து இரு நாடுகளின் படைகள் திரும்பப்பெறப்பட்டன. இதையடுத்து, பல மாதங்களாக நீடித்துவந்த பதற்றம் தணிந்தது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 9) லடாக் எல்லையில் மீதமுள்ள படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பங்கேற்கும் 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நேரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதில், லேயை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் 14ஆவது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் தலைமையிலான குழுவினர் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்கள்.
இச்சந்திப்பில் அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்தும், கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களிலிருந்து படைகளை விலக்குவது குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சத்தீஸ்கர்: நக்சல்களால் கடத்தப்பட்ட சிஆர்பிஎப் காவலர் விடுவிப்பு!