வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத் மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாகச் சீனா சென்றுள்ளார். நேற்று இரவு சீன தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்த ஜெய்சங்கர், இன்று காலை அந்நாட்டு துணை அதிபர் வாங் கிஷானை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, உயர்மட்ட அரசு அலுவலர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்.
அப்போது ஜெய்சங்கர் பிரசாத், "உலகளவில் நிலையற்ற அரசியல் சூழ்நிலை நிலவிவரும் வேலையில், அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இடையேயான நல்லுறவும் ஒரு காரணியாக அமைய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் சிறப்புத் தகுதி குறித்து சீனா ஏற்கனவே கவலை தெரிவித்திருந்த நிலையில், அதற்கு இந்தியா தரப்பில், 'காஷ்மீர் சிக்கல் உள்நாட்டு விவகாரம் - இதில் எந்தவிதமான சர்வதேச தலையீடும் தேவையில்லை' எனத் திட்டவட்டமாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் இந்திய-சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்திருப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.