காபூல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றபிறகு, அவர் ஆப்கானிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை. இந்த சந்திப்பில், இம்ரான் கானுடன் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, வணிகத்துறை ஆலோசகர் அப்துல் ரஷாக் தாவூத், பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செயலர் ஷோஹைல் முகமது, ஆப்கானிஸ்தானுக்கான சிறப்பு பிரதி நிதிகள் முகமது சாதிக் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கெடுத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காபூல் விமானநிலையத்தில் இம்ரான்கானை வரவேற்பதற்காக, ஆப்கானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஹனீஃப் அத்மர், அதிபர் சிறப்பு பிரதிநிதி உமர் டாட்ஷாய் மற்றும் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் இருக்கும் பாகிஸ்தான் தூதர் மன்சூர் அஹமது கான் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளும் இந்நிகழ்வில் உடன் இருந்தனர்.
இச்சந்திப்பின் மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான அலுவல் ரீதியிலான உயர் தரப் பரிமாற்றம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசயிருப்பதாக , பாகிஸ்தான் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பிற்கு முன்னதாக ஜூன் 2019ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் அதிபர் கானி பாகிஸ்தானுக்குச் சென்று பார்வையிட்டார்.
அதேபோல, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி மற்றும் இம்ரான்கான் இருவரும் இருநாட்டு உறவுகள் குறித்து தொலைபேசியிலும், கடந்த 2019ஆம் ஆண்டு மக்காவில் நடைபெற்ற 14ஆவது இஸ்லாமிய கூட்டமைப்பிற்கான மாநாட்டிலும் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.