அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், மறைமுக சக்திகளின் அழுத்தத்தினால், நவாஸூக்கு தண்டனை வழங்கப்பட்டது என்று நீதிபதி ஒப்புக்கொள்ளும் வீடியோ ஒன்றை அவரின் மகளும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி துணைத் தலைவருமான மரியம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
இதற்கிடையே, சிறையில் இருக்கும் நவாஸூக்கு வீட்டு உணவு வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த போலி அரசு, நவாஸ் ஷெரீபுக்கு வீட்டு உணவு வழங்க அனுமதி மறுத்துள்ளது. சுமார் ஐந்து மணி நேரமாக அவருக்குக் கொண்டுச் சென்ற உணவை கொடுக்கவிடாமல் ஊழியர் காக்க வைக்கப்பட்டுள்ளார்" என பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தனது மற்றொரு ட்வீட்டில், "அடுத்த 24 மணி நேரத்தில், இதனை அரசாங்கம் திரும்பப் பெறவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன். இதற்கு நீதிமன்றம் உதவி செய்யாத பட்சத்தில் காட் லக்பத் சிறை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்வேன்" என்று மரியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இதய நோயாளியான நவாஸூக்கு வீட்டு உணவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.