சீனாவின் ஹூபே மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதைத்தடுக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதேபோல கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க புதிய சிறப்பு மருத்துவமனையையும் சீனா கட்டியுள்ளது.
இந்நிலையில், சீனாவின் முக்கியப் பகுதிக்கு (Mainland China) வெளியே இரண்டாவது உயிரிழப்பு, இன்று ஹாங்காங் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை உறுதிசெய்துள்ள ஹாங்காங் நிர்வாகம், உயிரிழந்தவர் 39 வயது மதிக்கதக்க நபர் என்றும் அவர் ஜனவரி 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சீனாவின் வூஹான் மாகாணத்திற்குச் சென்றுவந்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அவரது தனிப்பட்ட தகவல்களைத் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. கரோனா வைரஸ் தொற்றால் பெரும்பாலும் வயதானவர்களும் சக்கரை, இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுமே உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமைதான் சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ் நாட்டில் கரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தது. இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் 425 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்ரம்பின் மத்திய கிழக்கு திட்டத்தை நிராகரித்தது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு!