சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கம் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் மீது தனது பிடியை வலுவாக்கும் வகையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அண்மையில் இயற்றியது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டபோதே ஹாங்காங்கில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இதன் மூலம் கருத்து சுதந்திரம் பறிபோகும் என்று ஜனநாயகவாதிகள் அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சனம் செய்து செய்தி வெளியிட்ட ’ஆப்பிள் டெய்லி’ என்ற ஊடகத்தின் அதிபர் ஜிம்மி லாய், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அந்நிய நாட்டு சக்திகளுடன் இணைந்து சதி செய்ததாக காவல் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
72 வயதான ஜிம்மி லாய், சீன சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், ஹாங்காங் மீதான சீனாவின் அடக்குமுறை குறித்தும் தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்தார். இந்நிலையில், ஜிம்மி லாயின் வீட்டில் சோதனையிட்ட காவல் துறையினர், அவரைக் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். அதேபோல், ஜிம்மி லாயின் மகன் வீட்டிலும் காவல் துறையினர் சோதனையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சோதனைகளில் 39 முதல் 72 வயதுடைய ஏழு பேரை ஹாங்காங் காவல் துறையினர் கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கைது செய்தவர்கள் குறித்த இதர விவரங்களை வெளியிட அவர்கள் மறுத்து விட்டனர்.
சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்த ஜிம்மி லாய், கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ ஆகியோரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூங்கு மூஞ்சி பிடனை வெற்றிபெற வைக்க சீனா முயல்கிறது - ட்ரம்ப் குற்றச்சாட்டு