ஜப்பானின் எம்.வி. வாகாஷியோ என்னும் சரக்கு கப்பல் நான்காயிரம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சீனாவிலிருந்து பிரேசில் சென்றது. அப்போது இந்தியப் பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மொரீஷியஸ் அருகே உள்ள பவளப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் கப்பலில் இருந்த ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. சுற்றுப்புறச் சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த புளூ பே ஆஃப் மெரைன் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விபத்தை மொரீஷியஸ் அரசு சார்பாக சுற்றுச்சூழல் அவசர கால நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு அந்நாட்டின் பல சுற்றுலா கடற்கரைகள், சதுப்பு நிலத் தோட்டங்கள் எனச் சுற்றுச்சூழல் பெரும் தாக்கத்தை விளைவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை அகற்ற அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதற்கு உதவும் விதமாக பெங்களூருவைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்ட உயர் ரக ஹெலிகாப்டர்களான 'துருவ்', 'சேதக்' ஆகியவை அனுப்பப்பட்டன.
இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர்கள் 110 மணி நேரம் பறந்து 600-க்கும் மேற்பட்டோரை எம்.வி. வாகாஷியோ கப்பலுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளது.
இது குறித்து ஹெச்.ஏ.எல். நிர்வாக இயக்குநரும், தலைவருமான மாதவன் பேசுகையில், ''துருவ், சேதக் ஹெலிகாப்டர்கள் தத்தமல் திறன்களை மீட்புப் பணிகளின்போது பலமுறை நிரூபித்துள்ளன. தேடல், மீட்புப் பணிகளுக்காக மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக இந்திய விமான படை, இந்திய கடற்படை, மொரீஷியஸ் காவல் துறை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இதனைத்தொடர்ந்து மொரீஷியஸுக்கான இந்திய தூதரக அலுவலர் பேசுகையில், ''இந்திய கடலோரக் காவல்படை சார்பாக 30 டன் சிறப்பு பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்நுட்ப குழுவிலிருந்து 10 பேர் எண்ணெய் கசிவு மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டனர்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துறைமுகத்துக்கு போர்க்கப்பல் நாளை வருகை.!