கோவிட்-19 தொற்றின் தாக்கம் தற்போது அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த மூன்று நாடுகளில் மட்டும், சுமார் 57 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வியாழக்கிழமை மட்டும் 61 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. மேலும், ஒரே நாளில் 960 பேர் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல பிரேசிலில் 42,907 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. பிரேசிலில் 1,199 பேர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனில் கரோனாவால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு
பிரிட்டனில் வியாழக்கிழமை மட்டும் 89 பேர் கோவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,602ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தொற்று பரவல் காரணமாக பல்வேறு துறைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பிரிட்டனைச் சேர்ந்த பூட்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 48 மருத்தகங்களை மூட முடிவு செய்துள்ளது, மேலும் தனது நிறுவனத்தில் பணிபுரியும் நான்காயிரம் பேரை நீக்கவும் பூட்ஸ் முடிவு செய்துள்ளது.
கோவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக அந்நிறுவனத்தின் வருவாய் பெருமளவு குறைந்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்று இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் இதுவரை 1,23,78,854 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,56,601 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 71,82,395 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: போலிச் சான்று விவகாரம்; பாகிஸ்தான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை!