உலகளவில் தொழில்நுட்பம் என்பது அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மனிதர்களின் சுமையைக் குறைப்பதற்கு புதிய கருவிகளை உருவாக்கினர் அறிவியல் அறிஞர்கள். ஆனால் தற்போது மனிதர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் தள்ளியதும் புதிய கருவிகள்தான். மனிதர்கள் செய்வதை விடத் மிகவும் குறுகிய காலத்தில் மிகவும் சிறப்பாக செய்வதால் மக்கள் தொழில்நுட்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
அவ்வாறு உலகில் யாரும் முயலாததைச் சாத்தியம் எனச் செய்து காட்டி அசத்தியுள்ளனர் சீன வியாபாரிகள். உலகளவில் இணையதள விற்பனையில் தனி இடத்தைப் பிடித்து வைத்துள்ளது அலிபாபா நிறுவனம். சமீப காலமாக விற்பனையில் சிறிய சரிவை சந்தித்தாலும் தனது நிரந்தர இடத்தினை தக்கவைப்பதற்கு உணவக வியாபாரத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஃப்ளைஸூ உணவக விடுதி (FLYZOO HOTEL)
சீனாவில் அலிபாபா நிறுவனம் தனது புதிய படைப்பாக 'ஃப்ளைஸூ' என்னும் உணவு விடுதி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உணவு விடுதியில் தங்கியுள்ள அனுபவத்தை அளிக்க முடிவு செய்து உருவாக்கியுள்ளனர் இந்நிறுவனத்தினர்.
ஸ்மார்ட்ஃபோன் மட்டுமே போதுமானது
ப்ளைஸூ உணவக விடுதியில் தங்குவதற்கு முன்பதிவுகளை வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்ஃபோனிலே பதிவு செய்து கொள்ளலாம். விடுதியில் தங்குவதற்கு பொதுவாக கேட்கப்படும் பணம், அடையாள அட்டையோ இங்குத் தேவை இல்லை. விடுதிக்குச் சென்றுவிட்டால் அங்கிருக்கும் உதவியாளர் வாடிக்கையாளரைப் பிரத்யேக கருவியால் புகைப்படம் எடுத்துக் கொள்வார். வாடிக்கையாளர் சீன குடிமகனாக இருந்தால் புகைப்படம் எடுப்பதே போதுமானது. ஸ்மார்ட்ஃபோன் இல்லாத வாடிக்கையாளர்களின் கடவுச்சீட்டை (Passport) ஸ்கேன் செய்து கொள்ளலாம். மேலும் விடுதியில் தங்குவதற்கான பணத்தை அலிபாபா செயலியில் உள்ள அலிபே (Alipay) மூலமாக டிஜிட்டல் வழியாகப் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.
சாவி, ஸ்மார்ட் அட்டை கிடையாது
வாடிக்கையாளர்கள் தாங்கள் தங்கும் அறையை முடிவு செய்ததும் அறைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அவர்களிடம் சாவியோ, ஸ்மார்ட் அட்டை என எந்த ஒரு உபகரணங்களும் தர மாட்டார்கள். வாடிக்கையாளர் லிஃப்டில் ஏறியதும் முகத்தை ஸ்கேன் செய்து அவர்களுக்கு அனுமதி அளித்துள்ள தளத்திற்கு மட்டுமே லிஃப்ட் செல்லும். மேலும் அறைக் கதவிலும் பொருத்தப்பட்டுள்ள முகம் கிரகித்தல் (Face Recognition) வசதி மூலமாக அறையின் கதவு திறக்கப்படும்.
ஸ்மார்ட் ஸ்பீக்கர்...
வாடிக்கையாளர் வசதிக்காக அறையில் ட்மால் ஜீனி (Tmall Genie) ஸ்மார்ட் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் வாடிக்கையாளர் அறைக்குச் சென்ற பிறகு ஹாயாக ஓய்வு எடுத்தால் போதும் மற்ற வேலைகளை அலிபாபா ஸ்மார்ட் ஸ்பீக்கர் பார்த்துக்கொள்ளும். அறைக்கதவு, தொலைக்காட்சி, விளக்கு, மின் விசிறி போன்றவற்றை ஆன்-ஆஃப் செய்வதற்கு வாடிக்கையாளர் குரல் வழியாகவே செய்து கொள்ள முடியும். மேலும் உணவு கேட்பது, வானிலை நிலவரங்கள் போன்றவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்
ரோபோ
ட் பட்லர் (Robot butler)
வாடிக்கையாளர்களின் சேவைக்காக அலிபாபா 'ரோபோ பட்லர்' ஒன்றையும் நியமித்துள்ளனர். ரோபோ பட்லர் கருவி அலிபாபா AI ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அழைத்தால் லிஃபிட் வழியாக ரோபோ பட்லர் அறைக்கு வந்தடையும். மேலும் வாடிக்கையாளருக்குத் தேவையான உணவுகள், கழிப்பறைக்குத் தேவையான குளியல் துண்டுகள், சோப்பு, ஷாம்பூ போன்றவற்றை அறைக்கு வந்து அளிக்கும்படி உருவாக்கியுள்ளனர்.
உணவக விடுதியை விட்டுக் கிளம்பும் போதும் யாருக்கும் குட்பை சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறு தனிமையை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உகந்தவகையில் மனிதர்களே இல்லாத உணவக விடுதியை உருவாக்கியுள்ளனர். ஃப்ளைஸூ உணவக விடுதி தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த பிரமாண்டமாகவே திகழ்ந்துவருகிறது. உலகளவில் மக்கள் மத்தியில் இந்த டிஜிட்டல் உணவகம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அலிபாபாவின் ஃப்ளைஸூ விடுதிக்குப் போட்டிக்கு வரவேண்டும் என்றால் ஒரு ஆகச்சிறந்த அதிபுத்திசாலியால்தான் முடியும்.
இதையும் படிங்க: 160 அடி உயரத்தில் பறக்கும் உணவகம்... இரவில் திகில் அனுபவம்!