பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்துவந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு சீனாவின் நிர்வாகத்துக் கீழ் வந்தது. ஹாங்காங்கை சீனா தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், அதற்கென தனி நாணயம், அரசியல் அமைப்பு, சட்டம் என தன்னிச்சையாகச் செயல்பட்டுவருகிறது.
இந்த நிலையில், ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும், கைதிகளாக உள்ள நபர்களை சீனா, தாய்வான் உள்ளிட்ட நாடுகளில் விசாரணை செய்வதற்கு நாடுகடத்த வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை அந்நகர அரசு சமீபத்தில் கொண்டுவந்தது.
இது ஹாங்காங் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்ந்து அந்நகர மக்கள் வீதிகளில் இறங்கி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறவே, ஹாங்காங் காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்து வந்த அழுத்தம் தாங்க முடியாமல் அந்த சர்ச்சைக்குரிய மசோதாவை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அந்நகர நிர்வாகத் தலைவர் கேரி லாம் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், மசோதாவை நிரந்தரமாக திரும்பப்பெற வலியுறுத்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை, அரசாங்கத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கான ஹாங்காங் வாசிகள் வீதிகளில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.