தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வட கொரியா திடீரென அறிவித்தது. இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வட கொரியா - தென் கொரியா இடையேயான உறவில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தற்போது வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் குவாங் ஜுங் குன், "உள்ளூர் அரசியல் குழப்பத்தில் திண்டாடி வரும் அமெரிக்கா, தேவையில்லாமல் அடுத்தவர்கள் பிரச்னைக்குள் தலையிட வேண்டாம். அப்படிச் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
தங்கள் நாட்டின் நன்மைக்காக மட்டுமல்ல, வரும் அதிபர் தேர்தலையும் அமெரிக்கா சுமூகமாக நடத்த வேண்டுமென்றால் நாக்கை அடக்கிக்கொள்ள வேண்டும். கொரிய நாடுகளின் உறவில் ஏதாவது சிறு மாற்றம் ஏற்பட்டாலும், தனக்கே ஆபத்து விளைந்தது போல அமெரிக்கா கபட நாடகமாடுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க, தென் கொரிய அலுவலர்கள் எங்க்களை ஏமாற்றியதை விடவா இது பெரிய ஏமாற்றம்?" எனத் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகர் ஹனாயில் நடந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் கலந்து கொண்டு அணு ஆயுத ஒழிப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, வட கொரியா - தென் கொரியா இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல - உச்ச நீதிமன்றம்