பெய்ஜிங்: இந்தியாவில் நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்து வரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியாவிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சீனா செய்யத் தயாராக உள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக சீனா வெளியிட்டுள்ள கடிதத்தில், "கரோனா வைரஸ் மனிதகுலத்தின் பொதுவான எதிரி. சீனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் இந்திய அரசாங்கத்தையும், மக்களையும் உறுதியாக ஆதரிக்கிறது.
இந்தியாவில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் தொற்றுநோய்கள் எதிர்ப்பு பொருட்கள் இந்தியாவிற்கு விரைவில் அனுப்பப்படும். இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப ஆதரவையும், உதவிகளையும் வழங்க சீனா தொடர்ந்து முயற்சிக்கும்.
இந்திய அரசாங்கத்தின் தலைமையில், மக்கள் நிச்சயமாக தொற்றுநோயை வெல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.