நேபாளத்தில் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஒலி அந்தக் கட்சியின் துணைத் தலைவராகவும் செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், அக்கட்சியின் செயல் தலைவரும், நேபாளத்தின் முன்னாள் பிரதமருமான புஷ்பா கமல் தாஹல் பிரசந்தா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், ஒலி பிரதமர் பதவியிலிருந்தும், கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.
மக்களுக்குக் கொடுத்த வாக்கையும், கட்சிப் பொறுப்பையும் பூர்த்திசெய்ய பிரதமர் ஒலி தவறிவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த நிலைக்குழுவில் பெரும்பாலானோரும் பிரதமர் ஷர்மா ஒலிக்கு எதிராகவே உள்ளனர். கடந்த சனி, ஞாயிறு அன்று பிரசந்தாவுடன் ஒலி மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இவ்வாறாக ஷர்மா ஒலியின் ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையில், நேபாளத்துக்கான சீனத் தூதர் ஹொவ் யாங்கி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான மாதவ் குமாரை நேற்று அவரது இல்லம் சென்று சந்தித்தாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, உள்கட்சிப் பூசல் குறித்து மாதவ் குமாரின் ஹொவ் யாங்கி கேட்டறிந்ததாகவும், ஆளுங்கட்சியில் அதிகரித்துவரும் விரிசல் குறித்து கவலை தெரிவித்ததாகவும் கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. நேபள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு மீண்டும் புதன்கிழமை கூடவுள்ள சூழலில், இந்தச் சந்திப்பானது நடைபெறவுள்ளது. பிரதமர் ஒலியைப் பதவியிலிருந்து நீக்குவதா? வேண்டாமா? என்பது குறித்து நிலைக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : படைகளை விலக்க இந்திய, சீன நாடுகள் முடிவு