சீனாவின் வூஹானில் தோன்றியதாகக் கூறப்படும் கரோனா தீநுண்மி, பெருந்தொற்றாக உருவெடுத்து உலக நாடுகளை சர்வநாசம் செய்துவருகிறது. இந்தத் தீநுண்மியால் உலகளவில் கிட்டத்தட்ட 72 லட்சம் பேர் (ஜூன் 9ஆம் தேதி கணக்கெடுப்பின்படி) பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தக் கரோனா தீநுண்மியைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல, ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் உலகப் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களின் உயிரைக் காப்பதா அல்லது பொருளாதாரத்தை மீட்பதா? என அனைத்து நாடுகளும் திக்குமுக்காடிப் போயுள்ளன.
இதனிடையே, இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் பல்வேறு ஆய்வு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சர்வதேச ஒத்துழைப்பு வலுவூட்டும் நோக்கில், அதனை மேற்கொண்டுவரும் ஆய்வு நிறுவனங்களுடன் சீனா கூட்டணி அமைத்துள்ளதாக அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வாங் ஜிகாங் தெரிவித்தார்.
முன்னதாக, மே மாதம் நடந்த உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "சீனா உருவாக்கிவரும் கோவிட்-19 தடுப்பு மருந்துகள் உலக நன்மைக்கே பயன்படுத்தப்படும். இது கோவிட்-19ஐ எதிர்கொண்டுவரும் வளரும் நாடுகளுக்கு எங்களின் உதவியாக இருக்கும்" எனக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : குழந்தைகளின் உயிரோடு விளையாடினால், அதற்கு பழனிசாமியே பொறுப்பு - உதயநிதி