கோவிட் - 19 வைரஸ் தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றின் கோர தாண்டவத்தால் சீனாவில் இதுவரை மூன்றாயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் வைரஸ் பரவல் குறித்த ஆரம்பகட்ட தகவல்களை சீனா மறைக்க முயன்றதே நிலைமை இவ்வளவு மோசமாகக் காரணம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதற்குப் பதிலடி தரும்விதமாக சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங், "அமெரிக்காவிலுள்ள சிலர், தொற்று நோய்க்கு எதிராக சீனாவின் போராட்டத்தைக் களங்கப்படுத்த முயலுகின்றனர். இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு சீனாதான் காரணம் என்ற பிம்பத்தை உருவாக்க முயலுகின்றனர்.
மனிதகுலத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய சீன மக்கள் செய்த பெரும் தியாகத்தைப் புறக்கணிக்கும்விதமாக இந்தப் பேச்சுகள் உள்ளன. மேலும், உலகளாவில் பொது சுகாதாரத்திற்கு சீனா ஆற்றிய முக்கியப் பங்களிப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இது இருக்கிறது" என்றார்.
கோவிட் - 19 வைரஸ் பிரச்னையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே கடந்த சில நாள்களாக மோதல் முற்றியுள்ளது. கரோனா வைரஸை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'சீன வைரஸ்' என்று குறிப்பிட்டார். அதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக சீனாவிலுள்ள அமெரிக்க செய்தியாளர்களை அந்நாடு வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீனாவால் நாம் அவஸ்தையை சந்திக்கிறோம் - ட்ரம்ப்