சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், அந்நாடு முழுவதும் மிக விரைவாக பரவியது. சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 71 பேர் உயிரிழந்தனர். இதில் 68 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த இரு வாரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளிலேயே இதுதான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று மட்டும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 499 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து பல நாள்களாக யாரும் இந்த வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்19 வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துவரும் போதும், சீனாவில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. இதனால் உலகில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமான சீன பொருளாதாரம் சரிவைச் சந்திக்கவுள்ளது.
இதையும் படிங்க: தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 893 ஆக உயர்வு!