மியான்மர் நாட்டிலிருந்து பிரிந்து சுயாட்சி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் அந்நாட்டின் ராணுவத்துடன் தொடர்ந்து போராடிவருகின்றன. சீன எல்லையில் நடைபெறும் இந்தப் போராட்டம் காரணமாக, அவ்வப்போது சீனாவிலுள்ள கட்டடங்களும் பாதிப்பிற்குள்ளாகும். சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும்.
மேலும், இந்தத் தாக்குதல்கள் காரணமாக எல்லைத் தாண்டிய குற்றச்செயல்களும் சீனாவில் அதிகரித்துவருகிறது. சண்டைகளால் பாதிக்கப்படும் அகதிகள் மியான்மரிலிருந்து சீனாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது வழக்கம்.
இந்நிலையில் மியான்மர் எல்லையிலிருந்த ஒரு எரிவாயு சேமிப்பு நிலையத்திலிருந்து வந்த துப்பாக்கி, பீரங்கி குண்டுகள் காரணமாக யுன்னன் மாகாணத்திலுள்ள ஜேஐர்கோ என்ற நகரிலுள்ள பள்ளிகள், கட்டடங்கள், வாகனங்கள் சேதமடைந்தன.
இச்சம்பவத்தால் சீனாவில் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது. இருப்பினும் மியான்மரில் என்ன நிலை என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மியான்மர் - சீன எல்லையை சீனா மூடியுள்ளது.
மியான்மரின் ராணுவத் தலைவர்களுடன் சீனா நீண்டகால நல்லுறவைக் கொண்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜனவரி மாதம் மியான்மருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இருப்பினும் அந்நாட்டு மக்களிடையே சீன எதிர்ப்பு நிலை தொடர்ந்து இருந்துவருகிறது.
இதையும் படிங்க: சீனாவில் வெகுவாகக் குறைந்துவரும் வைரஸ் பாதிப்பு!