கான்பரா: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று காலை தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மூத்த குடிமக்களுடன் இணைந்து கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசிக்கான முதல் டோஸினை செலுத்திக்கொண்டார். இந்தக் குழுவில் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற 84 வயதான நபர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார் என ஆஸ்திரேலிய தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
பின்னர் பேசிய மோரிசன், "நாளை மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்குகிறது. எனவே, அதற்கு முன்பு மக்களிடம் தடுப்பூசி மீது இருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டும். அதற்காகவே இதனை நாங்கள் செலுத்திக்கொண்டோம். தடுப்பூசி பாதுகாப்பானது. தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அது மிகவும் முக்கியமானது. மேலும், தொற்றால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய மற்றும் முன்களப் பணியாளர்கள் தடுப்பூசியினை முதலில் செலுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
முன்னதாக பேசிய அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் கிரெக் ஹன்ட், "மக்களிடம் தடுப்பூசிகளின் நம்பிக்கையைப் பெறவே அரசியல் தலைவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவருக்கு இன்னும் சில நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்தப்படும். மக்கள் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அவற்றிற்கு விரைவில் பதிலளிக்கப்படும்" என்றார்.
மக்களின் பாதுகாப்பே முதல் முக்கியம் என்பதால் ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய இரு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளோம். இதையடுத்து கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் நாடு அடுத்தகட்டத்தை எட்டும் எனவும் தெரிவித்தார்.