அண்டை நாடான நேபாளத்தில் அரசியல் சூழ்நிலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இதற்கு முக்கிய காரணம் நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி. இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டு மசோதா நிறைவேற்றியது மட்டுமின்றி, இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கட்சியின் உள்ளே பிளவு ஏற்படவும் தொடங்கியுள்ளது. இவருக்கு எதிராக முன்னாள் பிரதமரான புஷ்பா கமல் தஹால் பிரசந்தா உட்பட பல உறுப்பினர்கள் போர்க்கோடி தூக்கியுள்ளனர்.
இப்பிரச்னைக்குத் தீர்வு காண கட்சியின் செயல் தலைவர் பிரசந்தாவுடன் பிரதமர் ஒலி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஐந்துக்கும் மேற்பட்ட முறை ஒரு வாரத்தில் மட்டும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர்.
இந்நிலையில், சித்வானின் மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய பிரசந்தா, 'கரோனா நெருக்கடி, இயற்கைப் பேரழிவுகள் குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதுவும் அரசியல் பிரச்னைகளால் பாதிக்கக்கூடாது. இந்த கரோனா போரில் அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் சமூகம், ஊடகங்கள், மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
பிரதமர் ஒலியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் 45 பேர் கொண்ட நிலைக்குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 22 பேர் உயிரிழந்ததை மேற்கோள் காட்டி, கடைசி நேரத்தில் இக்கூட்டம் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது.