சீனாவின் மிகப்பெரிய பணக்காரரான ஜாக்மாவுக்கு சொந்தமான அலிபாபா நிறுவனம், புதிய சிக்கல் ஒன்றை சந்தித்து வருகிறது. அந்நிறுவனம் பிற நிறுவனங்கள் வளர்ச்சியடையக்கூடாது என்பதற்காக, பல்வேறு தந்திர வேலைகளில் ஈடுபட்டு வந்தது தற்போது தெரிய வந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய அந்நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பு (Chinese regulators), அலிபாபா நிறுவனத்திற்கு 2.8 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 20 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தொழில், நிதி, சுகாதார என பல்வேறு துறைகளில் சீனாவின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், அலிபாபா உள்ளிட்ட சீனாவின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களின் ஆதிக்கம் கவலையளிப்பதாக அந்நாட்டு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். அலிபாபா நிறுவனம் தனது வளங்களைப் பயன்படுத்தும் சில்லரை விற்பனையாளர்களிடையேயான போட்டியைக் குறைக்கிறது. பல பொருள்களை இலவசமாகக் கொடுத்து, பலரது வியாபாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அந்நிறுவனம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
தற்போது, அந்நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பு விதித்துள்ள இந்த அபராதமானது, 2019ஆம் ஆண்டின் அலிபாபாவின் மொத்த விற்பனையான 69.5 பில்லியன் அமெரிக்க டாலர்களில் நான்கு விழுக்காடு மட்டுமே ஆகும்.
இந்நிலையில், இந்த நடவடிக்கை அலிபாபா நிறுவனத்துக்கும் அதன் பில்லியனர் நிறுவனரான ஜாக் மாவுக்கும் பெரும் பின்னடைவாக அமையும் என் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர் பட்டியலில், கடந்த ஆண்டு ஆசியப் பணக்காரர்களில் முதலிடத்திலிருந்த ஜாக்மா, இந்த ஆண்டு ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அலிபாபா ஜாக்மாவை பின்னுக்குத் தள்ளிய அம்பானி: கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம்!