ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்குமிடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வார காலமாக இரு தரப்பினரிடையே நடக்கும் தாக்குதல்களின் வீரியம் அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி பஹர்க் மாவட்டத்தில் தலிபான்- ஆப்கான் பாதுகாப்புப் படையினரிடையே நடைபெற்ற மோதலில் 30க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மசூதியில் தலிபான் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஆப்கான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று (அக்.23), நிம்ரோஸ் மாகாணத்தில் பதுங்கியிருந்த தலிபான் பயங்கரவாதிகள் அவ்வழியே வந்த பாதுகாப்புப் படையினரிடம் மீது நடத்திய தாக்குதலில், 20 வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆறு வீரர்களை பிணைக்கைதிகளாக தலிபான் பயங்கரவாதிகள் அழைத்துச் சென்று விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. இது தொடர்பாக எந்தவிதமான தகவலையும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை. அமைதி ஒப்பந்தம் குறித்து ஒரு பக்கம் பேசி வரும் சமயத்தில், ஆப்கானில் அரங்கேறும் பயங்கரவாத நடவடிக்கைகள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.