அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இந்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் நேட்டோ நாட்டு பிரதிநிதிகளை சந்திக்கும் அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் குறித்து பேசவுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையினர் போர் தாக்குதல் மேற்கொண்டுவருகின்றனர்.
உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளையும், ஆயுதங்களையும் வழங்கிவருகின்றன. மேலும், ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துவருகின்றன. இந்த சூழலில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த ஐரோப்பிய பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின்போது பைடன் போலந்து நாட்டிற்கு செல்லவுள்ளார் என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதை அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைனின் அண்டை நாடான போலந்திற்கு போர் காரணமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் குடிபெயர்ந்துள்ளனர். குறிப்பாக நேட்டோ நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமாக குரல் எழுப்பும் நாடாக போலந்து இருந்துவருகிறது. எனவே, ஜோ பைடனின் இந்த பயணம் சர்வதேச அரசியல் நோக்கர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பேச்சுவார்த்தை தோல்லி அடைந்தால் 3ஆம் உலகப்போர் - உக்ரைன் அதிபர் எச்சரிக்கை