டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், ”ஒலிம்பிக் விளையாட்டு விண்வெளியில் நடந்தால் எப்படி இருக்கும்” என்ற குறும்பான கற்பனையுடன், விண்கலத்தில் மிதந்தபடி விளையாடி நாசா விண்வெளி வீரர்கள் காணொலி வெளியிட்டுள்ளனர்.
டீம் சோயஸ், டீம் ட்ரேகன் என இரண்டு குழுக்களாகப் பிரிந்து அவர்கள் விளையாடும் இந்தக் காட்சி காண்போரை குதூகலிக்கச் செய்கிறது.
முதல் விளையாட்டாக, No hand Ball எனும் பெயரில், பிங் பாங் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பாலை தங்கள் மூச்சுக்காற்றால் தள்ளியும் ஊதியும் மிதந்தபடியே விளையாடுகின்றனர்.

இரண்டாவதாக sychronised floating எனும் விளையாட்டை ஒன்றிணைந்து மிதந்தபடி விளையாடுகிறார்கள்.

இறுதியாக மிதந்தபடி, ஜிம்னாஸ்டிக் செய்தும் நீந்தியும் விண்வெளி வீரர்கள் விளையாடுகின்றனர். இந்தக் காணொலியை நாசா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
தங்கள் வீடுகளைப் பிரிந்து நம்மால் கற்பனை செய்ய இயலாத பேரண்டத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் மகிழ்ந்து விளையாடும் இந்தக் காட்சி, காண்போரை மகிழ்வித்து மெய்சிலிர்க்கவைத்து வருகிறது.

இதையும் படிங்க: மிரினே புயல்: 29 ஆயிரம் மக்களை வெளியேற்ற உத்தரவு!