உலகப் புகழ்பெற்ற மூத்த அரசியல் நிகழ்ச்சித் தொகுப்பாளரான லர்ரி கிங், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்துவருகிறார். இவருக்கு கடந்த 3ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிடார்ஸ்-சினாய் மருத்துமவனையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் லர்ரி கிங்கிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சி.என்.என். செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் லர்ரி கிங் அனுமதிக்கப்பட்டது குறித்து அவரது உறவினர்கள் பகிரங்கமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சைப் பெற்றுவரும் அவரது தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.
1950ஆம் ஆண்டுகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளரான தனது பயணத்தை தொடங்கிய லர்ரி இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி உலகளவில் பலரது மனங்களிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச அளவில் வழங்கப்படும் பீபோடி விருது, எம்மி விருது, கேபிள் ஏசிஇ விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற லர்ரி, ரஷ்யாவின் தலைவர் புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், பிரபலங்கள், ஜனாதிபதிகள், விளையாட்டு வீரர்கள் என நேர்காணல் கண்டுள்ளார்.
1988ஆம் ஆண்டில், லர்ரி கிங் கார்டியாக் பவுண்டேஷன் என்னும் அமைப்பை நிறுவி அதன் மூலமாக மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களும் விலையில்லாமல் இதய சிகிச்சைப்பெற நிதி உதவிகளை வழங்கிவருகிறார்.
கடந்த சில ஆண்டுகாலமாக மாரடைப்பு, நீரிழிவு, நுரையீரல் புற்றுநோய் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்னைகளை எதிர்த்துப் போராடிவரும் லர்ரி கிங், கரோனா பாதிப்பையும் வெற்றிகொண்டு மீண்டும் திரையில் தோன்றுவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர்.
இதையும் படிங்க : ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்