வெனிசூலாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார்.
இதற்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. எனினும், அதிபர் பதவியிலிருந்து தான் இறங்கப் போவதில்லை என்றும் பொதுத்தேர்தல் நடத்தப்படாது என்றும் மடூரோ அறிவித்தார்.
மேலும், கடந்த பிப்ரவரி மாதம் மனிதாபிமான உதவிகளை நாட்டுக்குள் கொண்டு வரவும் தடை விதித்தார். இதனையடுத்து, வெனிசூலாவில் நடைபெறும் அரசியல் நெருக்கடியை பிற தென் அமெரிக்க நாடுகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், வெனிசூலாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யா, தனது ராணுவத்தை வெனிசூலாவிற்கு நேற்று அனுப்பியது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்யா ராணுவத்தின் இந்த தொடர் நடவடிக்கையால் வெனிசூலாவில் பதற்றமான சூழல் மேலும் அதிகரித்துள்ளது. ரஷ்யா தனது கட்டுபாடற்ற நடவடிக்கையை கைவிட வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் நிக்கோலஸ் மடூரோ தலைமையிலான அரசு மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.