முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்கா-தாலிபான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தின் விளைவாக 2001ஆம் ஆண்டு முதல் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படையினர் தற்போது வெளியேறவுள்ளனர்.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செயலர் மார்க் எஸ்பர், பென்டகன் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அதன்படி, அமைதி ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ள நிலையில் சுமார் 10 நாள்களுக்குள் முதல்கட்ட பாதுகாப்புப் படையினர் வெளியேறத் தொடங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 ஆயிரத்துக்கும் மேலான அமெரிக்கப் படையினர் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளனர் எனவும் முதற்கட்ட வெளியேற்றத்துக்குப்பின் அது எட்டாயிரத்து 500ஆக குறையும் எனக் கூறினார். அமெரிக்காவின் வெளியேற்றத்துக்குப் பின் அங்கு அமைதி தொடருமா என்ற சந்தேகம் இருந்தாலும் ஒப்பந்தம் நம்பிக்கையளிப்பதாக எஸ்பர் தெரிவித்தார்.
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் அல்கொய்தா முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனைப் பிடிக்க ஆப்கானிஸ்தானில் படையெடுத்த அமெரிக்கா, அங்கு நிலவிய தாலிபான் ஆட்சியை நீக்கிவிட்டு புதிய அரசை நிறுவியது. தற்போது ஆப்கானிஸ்தானின் அதிபராக அஸ்ரஃப் கானி பதவி வகித்துவருகிறார்.
இதையும் படிங்க: இன்னும் காஸ்ட்லியாகும் ஐபோன்