உலக வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு போகிறது. தற்போதுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, வரும் செமஸ்டரில் அனைத்துப் பாடங்களையும் ஆன்லைன் வழியாக நடத்த அந்நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை முற்றிலுமாக ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளனவோ, அந்தப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று ட்ரம்ப் அரசு உத்தரவிட்டிருந்தது.
அமெரிக்க அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக எம்ஐடி, ஹார்வர்டு உள்ளிட்ட எட்டுப் பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதற்கு அமெரிக்காவிலுள்ள 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வரும் செமஸ்டருக்கான பாடங்கள் முழுமையாக ஆன்லைனில் மாற்றப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், எந்தெந்த மாணவர்கள் மார்ச் 9ஆம் தேதிக்கு முன்பதிவு செய்திருந்தார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், மார்ச் 9ஆம் தேதிக்குப் பின் பதிவுசெய்த மாணவர்கள், அதாவது புதிதாக வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா பொறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாகவும் தற்போது விசா பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாகவும் இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தொடரும்போதும், அங்கு இயல்புநிலை திரும்பிவிட்டதாகக் காட்ட அதிபர் ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன்படி, ஆன்லைனில் பாடங்களை நடத்த முடிவுசெய்துள்ள பல்கலைக்கழகங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களை மீண்டும் பழைய முறையில் இயங்கவைக்க முடியும் என்று அதிபர் ட்ரம்ப் நம்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பாதிப்பு தொடரும் சூழ்நிலையில், மீண்டும் பழையபடி வகுப்புகளை நடத்துவது என்பது பெரும் அபாயத்தையே ஏற்படுத்தும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 42 லட்சத்து 48 ஆயிரத்து 492 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 492 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'இனி சாலையை பார்க்க வேண்டாம்' - சோதனையில் ஓட்டுநர் இல்லாத கார்!