அல்கொய்தா அமைப்பின் இரண்டாவது முக்கிய பயங்கரவாதியான முஹம்மத் அல் மஸ்ரி, கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரான் தலைநகரில் கொல்லப்பட்டார் என அமெரிக்க முன்னாள் உயர் மட்ட அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அல் மஸ்ரி எங்கே உள்ளார் என்பது குறித்து அமெரிக்க புலனாய்வுத்துறை இஸ்ரேல் நாட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு படையினர் அவரை கொலை செய்தனர் என அமெரிக்க முன்னாள் உயர்மட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அவரது கொலையை உறுதி செய்த அவர்கள், மேலும் இது குறித்த விவரங்களை அளிக்க மறுத்துவிட்டனர்.
கடந்த 1998ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதி, கென்யா, டான்சானியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் குண்டு வெடிப்பு மூலம் தகர்க்கப்பட்டன. இந்த குண்டுவெடிப்பு நினைவு நாளிலேயே, அல் மஸ்ரி கொல்லப்பட்டார். இந்த தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியவர் அல் மஸ்ரி என அமெரிக்க புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
கடந்த 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி, அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு காரணமான அல்-கொய்தாவிற்கு இந்தப் படுகொலை பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.