இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே கடந்த ஒரு வார காலமாக மீண்டும் மோதல் வலுத்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள இஸ்லாமிய புனித தலங்களில் பாலஸ்தீனியர்கள் ரமலான் மாத தொழுகை மேற்கொண்டபோது, இஸ்ரேல் காவலர்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் தொடர்ச்சியாக மோதல் வெடித்தது.
இந்த மோதலின் தாக்கம் இரு நாட்டின் எல்லைப் பகுதியான காசாவில் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. எல்லைப் பகுதியான காசாவில் பாலஸ்தீன கிளர்ச்சி படையான ஹமாஸும் இஸ்ரேல் ராணுவமும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இஸ்ரேல் மீதான பாலஸ்தீன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், பாலஸ்தீன படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இருதரப்பும் அமைதி காக்க வேண்டிய சூழலில் இதுபோன்ற தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல எனவும், நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அனைத்து உரிமையும் உண்டு என நெட் பிரைஸ் கூறியுள்ளார்.