அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர், காவலர் ஒருவரின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, நிறவெறிக்கு எதிராக அமெரிக்க மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன.
இந்நிலையில், போராட்டக்காரர்களைச் சமாளிக்க விமானப்படை தளபதியாக இருக்கும் ஜெனரல் சார்லஸ் பிரவுன் ஜூனியர் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை முப்படைகளுக்குமான தலைமைத் தளபதியாக துணை அதிபர் மைக் பென்ஸ் நியமித்துள்ளார். பொதுவாக இதுபோன்ற முக்கிய நியமனங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் இழுபறி ஏற்படும்.
ஆனால், ஜெனரல் சார்லஸ் பிரவுன் ஜூனியரின் நியமனம் குறித்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 98 வாக்குகள் அவருக்கு ஆதரவாக பதிவாகின. ஒரு வாக்கு கூட அவருக்கு எதிராகப் பதிவாகவில்லை.
ஜெனரல் சார்லஸ் பிரவுன் விமானப் படையில் தளபதியாக உள்ளார். 2,900 மணி நேரம் விமானத்தை இயக்கியுள்ளார், 130 போர்களில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர். முப்படைகளுக்குமான தலைமைத் தளபதியாக முதல்முறையாக ஆப்பிரிக்க அமெரிக்கர் நியமிக்கப்படுவது ஒரு வரலாற்று நிகழ்வு என்று துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விமானப் படையில் தான் சந்தித்த நிறரீதியான பாகுபாடு குறித்து ஜெனரல் சார்லஸ் பிரவுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "பைலட்டாக இருந்தபோதும் சரி, விமானப் படையில் உயர் அலுவலராக இருந்தபோதும் சரி, நான் மட்டுமே ஒரே ஆப்பிரிக்க அமெரிக்கராக இருப்பேன்.
அங்கு மற்றவர்கள் அணிந்திருக்கும் அதே ராணுவ உடையைத் தான் நானும் அணிந்திருப்பேன். ஆனால், என்னைப் பார்க்கும் ராணுவ வீரர்கள் அனைவரும் நீ பைலட்டா என்ற கேள்வியைக் கேட்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டம் - அடிமைகளை விற்றவரின் சிலை அகற்றம்