அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2017ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். வெளிப்படையான பேச்சு, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் எனக் கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து பெரும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ட்ரம்ப், 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே!' என்று முழக்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.
இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எனினும், மெக்ஸிகோ எல்லை விவகாரத்தில் ட்ரம்ப் மேற்கொண்ட நடவடிக்கை அவரை வெறுக்கவும் செய்தது. அதே சமயம், வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்து, நட்பு பாராட்டியது கொரியத் தீபகற்பத்தில் அமைதி மலர வழிவகை செய்துள்ளது.
இந்நிலையில், சீனா பொருட்களுக்குக் கூடுதலாக வரி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையை திரும்ப பெற்றுக்கொள்ளாதது, ஈரானுடனான மோதல் என பல்வேறு பிரச்னைகளில் அவரின் நிலைப்பாடு பெரிதும் விவாதிக்கப்பட்டுவருகிறது. இவை அனைத்தும் ஒருபுறமிருந்தாலும், மிகவும் உற்சாகமிக்க நபராக ட்ரம்பை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர்.
எப்பொழுதும், சுறுசுறுப்புடன் இயங்கும் அவர் ஜூன் 14ஆம் தேதி தனது 73ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனையொட்டி அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அடுத்தமுறையும் அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால், மிகவும் வயதான அதிபராக இடம்பெறுவார்.
முன்னதாக, ரொனால்டு ரீகன், டுவைட் டி. ஐசனோவர் ஆகியோர் வயதான அதிபர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.