அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வான பொது விவாதத்தில் இரண்டு கட்சி வேட்பாளர்களும் கலந்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிப்பார்கள். அந்த வகையில், அதிபர் வேட்பாளர்களான டொனால்டு ட்ரம்ப், ஜோ பிடனுக்கு இடையே கடந்த மாதம் 29ஆம் தேதி ஒஹிகோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடைபெற்றது.
இதற்கிடையே ட்ரம்ப் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் இரண்டாவது விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இறுதிக்கட்ட நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி டென்னசியிலுள்ள நாஷ்வில்லே பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதற்கு நடுவராக கிறிஸ்டன் வெல்கர் பங்கேற்றார். அனல் பறந்த விவாதத்தில், இந்தியாவில் காற்று மாசு மோசமாக உள்ளது என ட்ரம்ப் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் காற்றின் மாசு மோசமாக உள்ளது. ட்ரில்லியன் கணக்கில் டாலர்களை செலவு செய்தபோதிலும் நம்மை அந்நியாயமாக நடத்துகின்ற காரணத்தால், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினோம். இந்த ஒப்பந்தத்தினால், லட்சக்கணக்கான வேலைகளை இழக்கவும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை இழக்கவும் நான் விரும்பவில்லை" என்றார்.
இதற்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. அமெரிக்காவுக்கு தக்க பதிலளிக்கும்படி, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த விமர்சனம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த இந்திய, சீன நாடுகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்.
இதையும் படிங்க: கஜகஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல்: வெற்றி யாருக்கு?