அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாள்களே உள்ளதால், இரு தரப்பினரும் தங்கள் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அதிபர் ட்ரம்பிற்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப், கடந்த வாரம் வீடு திரும்பினார். இருப்பினும், கடந்த சில நாள்களாக அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தனிமையில் இருந்தார்.
தற்போது அதிபர் ட்ரம்பிற்கு நடத்தப்பட்ட கரோனா சோதனையில் அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்றும் இதனால் ட்ரம்ப் இனி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்றும் ட்ரம்பின் மருத்துவர் சீன் கான்லி தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ட்ரம்ப் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "இன்றிலிருந்து 22 நாள்களில் தேர்தல். அதில் நாம் இந்த மாகாணத்தை வெல்லப்போகிறோம். அமெரிக்காவை வெல்லப்போகிறோம், இதன்மூலம் வெள்ளை மாளிகையை இன்னும் நான்கு ஆண்டுகள் ஆளப்போகிறோம்.
நான் இப்போது மிகவும் பலமாக உணர்கிறேன். உங்கள் அனைவரையும் நான் முத்தமிட நினைக்கிறேன். இங்கிருக்கும் ஆண்கள், அழகிய பெண்கள் என அனைவரையும் முத்திமிட நினைக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து சீனாவைத் தாக்கிப் பேசிய ட்ரம்ப், "கடந்த நான்கு ஆண்டுகளில் நாம் சீனா உள்ளிட்ட அனைவைரயும் வீழ்த்திவிட்டோம். இந்தத் தொற்று வருவதற்கு முன்பு வரை, சீனாவுக்கு நாம் பாடம் கற்பித்தோம். ஒருபோதும் வீழ்த்தவே முடியாது என்று நினைத்த சீனாவையே நாம் வீழ்த்தியுள்ளோம்.
மேலும், கரோனா தொடங்கிய காலத்தில் சீனாவிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடைவிதித்தேன். என்னைவிட யாரும் இந்தக் கரோனாவில் வேகமாகச் செயல்படவில்லை. ஆனால், தற்போது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக இருக்கும் ஜோ பிடன் இதற்கு என்னை விமர்சித்தார். ஆனால், இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்துள்ளோம்.
கரோனா காரணமாக இதுவரை அமெரிக்காவில் 2.1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சீனாவே காரணம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவருக்கு உடல்நிலை பாதிப்பு - மருத்துவ சோதனைகள் நிறுத்தம்