அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போது கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை பணிகளில் மீண்டும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், கோவிட்-19 பரவல் குறித்தும் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் அவர் தீவிர விமர்சனங்களை முன்வைத்தார்.
உலக சுகாதார அமைப்பு சீனாவின் ஆதிக்கத்தின்கீழ் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அந்த அமைப்பின் பொறுப்பற்றச் செயல்பாட்டை இனி ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார். சீனாவின் மக்கள் தொகை சுமார் 140 கோடிக்கு மேல் உள்ள நிலையில் அந்நாடு உலக சுகாதார அமைப்பிற்கு நிதியாக 286 கோடி ரூபாய் அளிக்கிறது.
அதேவேளை சீனாவைவிட சுமார் நான்கு மடங்கு குறைவான மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, சுமார் மூன்றாயிரத்து 600 கோடி ரூபாய் நிதியுதவி செய்கிறது. இப்படியிருக்க அமெரிக்காவின் பணம் இனி வீண்போகவிட மாட்டேன் என அவர் கூறினார்.
லாக்டவுன் மட்டுமே நோயைக் கட்டுப்படுத்த தீர்வு இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டேவிட் நபாரோ கருத்தை வரவேற்ற ட்ரம்ப், தான் இதைத்தான் நீண்ட நாள்களாகக் கூறிவருவதாகவும் நோயைவிட அதன் தீர்வு மோசமாக மாறிவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவருக்கு உடல்நிலை பாதிப்பு - மருத்துவ சோதனைகள் நிறுத்தம்