பாம் பீச்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், பாம் பீச் கவுண்டியில் அதிகாரப்பூர்வ அலுவலகம் ஒன்றை நிறுவியுள்ளார்.
இந்த அலுவலகத்தில் இருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் செய்திகள் வெளிவர உள்ளன. இது குறித்து வெளியான அறிக்கையில், “அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முறைப்படி அலுலகம் ஒன்றை திறந்துள்ளார். இதிலிருந்து இனிவரும் காலங்களில் டொனால்ட் ட்ரம்ப்பின் அறிக்கைகள், செய்திகள் வெளியாகும்.
அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் ஒரு சாம்பியனாக இருப்பார் எப்போதும் போல் திகழ்வார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவாரா? என்பது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்க அதிபர் தோல்வி, நாடாளுமன்ற வன்முறை போன்ற கடின நேரங்களில் ட்ரம்ப் கடுமையான கருத்துகளை சமூக வலைதளத்தில் முன்வைத்தார். இதனால் அவரது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. ட்விட்டர் ஒருபடி மேலே சென்று ட்ரம்பின் கணக்கை நிரந்தரமாக மூடியது.
இதற்கு மத்தியில் வெள்ளை மாளிகையை காலி செய்த டொனால்ட் ட்ரம்ப், பாம் பீச்சில் உள்ள மார்-ஏ-லாகோ கார்டனில் ஓய்வில் இருந்துவந்தார். அரசியல் தொடர்பாக எதுவும் கூறவில்லை. எனினும் செய்தியாளர் ஒருவருக்கு தனியாக பேட்டி ஒன்று அளித்தார். அந்தப் பேட்டி மிகவும் சுருக்கமாக இருந்தது. இந்நிலையில் தற்போது முன்னாள் அதிபர் ட்ரம்ப் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்பின் அடுத்த நடவடிக்கை என்ன?