அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிபர் தேர்தல் தொடர்பாக டைம் 100 காணொலியில் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்க்லேவும் உரையாற்றினார்கள். அப்போது, ”நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமானது. 'ஆனால், இது வித்தியாசமான ஒன்று'. இந்த வாக்கெடுப்பில் தான் நமது குரல்கள் ஒலிக்கின்றன. வெறுக்கத்தக்க பேச்சு, தவறான தகவல் பகிர்தல், ஆன்லைன் அவமதிப்பு போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்” என அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.
இந்த ஜோடி தங்களது உரையாடலில் அதிபர் ட்ரம்ப், ஜோ பிடனின் பெயர்களை நேரடியாகக் குறிப்பிடவில்லை எனினும் ஹாரி-மேகன் ஜோடி தங்களது பேச்சில் மறைமுகமாக ட்ரம்ப்பை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தபோது, ”ஹாரி-மேகன் உரை மறைமுகமாக ஜோ பிடனை ஆதரிப்பது போல் தோன்றுகிறதா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி ஏழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ட்ரம்ப், "நான் மேகனின் ரசிகர் கிடையாது என்பதை சொல்லிக் கொள்கிறேன். இது அவருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். ஆனால், ஹாரிக்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இது தேவை" எனக் கூறினார்.
முன்னதாக, ஹாரி-மேகன் ஜோடி கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய சமயத்தில் பேசிய ட்ரம்ப், ”ஹாரி - மேகனுக்கு தேவையான பாதுகாப்புக் கட்டணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டும். அமெரிக்க அரசு செலுத்தாது” எனத் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.