சீனாவின் வூஹான் நகரில் தோன்றி உலகையே ஆட்கொண்டுவரும் கரோனா வைரஸ், அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக அந்நாட்டில் இதுவரை ஏறக்குறைய 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 55 ஆயிரத்து 943 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க அரசின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம் என மருத்துவ நிபுணர்கள், எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் என பல தரப்பினரும் அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் அலெக்ஸ் அஸாரை நீக்குவது குறித்து வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடந்து வருவதாக அங்கு பணிபுரியும் ஒரு அலுவலர் ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்தார்.
இந்தச் செய்தி அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதற்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், "சுகாதாரத்துறை அமைச்சர் அலெக்ஸ் அஸாரை நான் பதவிநீக்கம் செய்யப்போவதாக எழுந்த செய்தி முற்றிலும் பொய்.
மக்கள் மனதில் குழப்பத்தையும், பதற்றத்தையும் உண்டாக்கும் நோக்கில் ஊடங்கங்கள் இதுபோன்று காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து அவர்கள் அலெக்ஸிடம் கூட கேட்கவில்லை. அலெக்ஸ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்" எனக் கூறியுள்ளார்.
மேலும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் ஜூட் டீரே கூறுகையில், "அமைச்சர் அஸார் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அமைச்சகம் குறித்த வதந்திகள் பரப்புவது பொறுப்பற்ற செயலாகும், கோவிட்-19 நோயைத் தடுக்கும் அரசை திசை திருப்பவும் கூடும்" என்றார்.
இதையும் படிங்க : இருள் விலகத் தொடங்கியுள்ளது - பிரிட்டன் பிரதமர் நம்பிக்கை