அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், கடந்த மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் காவல் துறையினரின் பிடியின்கீழ் சாலையோரம் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஜார்ஜின் மரணத்துக்கு நீதி கோரியும், நிறவெறிக்கு எதிராகக் குரல் எழுப்பியவாறும் அந்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன.
இதனிடையே, சமீபத்தில் நியூயார்க் மாகாணம் பஃபலோ நகரில் நடந்த போராட்டத்தின்போது, அதில் கலந்துகொண்ட 75 வயது முதியவரை இரண்டு காவலர்கள் மூர்க்கத்தனமாகத் தள்ளி விட்டதில், அவரது தலையில் அடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி வரும் சூழலில், இது குறித்து தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்
அதில், "காவல் துறையினரால் தள்ளிவிடப்பட்ட போராட்டக்காரர் ஆன்டிஃபா (ஃபாசிசத்துக்கு எதிரான இடதுசாரி இயக்கங்கள்) உறுப்பினராக இருக்க வேண்டும். 75 வயதான மார்டின் குகினோ பணியிலிருந்த காவல் துறையினரின் தொலைத்தொடர்பு கருவிகளை சேதப்படுத்த முயன்றது போல் தோன்றுகிறது. வேண்டுமென்றே கீழே விழுந்து நாடகமாடியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த பதிவு அந்நாட்டில் ஏற்கனவே நிலவி வரும் சர்ச்சையையை, மேலும் அதிகரித்துள்ளது.
நிறவெறிக்கு எதிராக போராட்டம் வெடித்ததிலிருந்தே காவல் துறையினருக்கு ஆதரவாகப் பேசிவரும் ட்ரம்ப், போராட்டக்காரர்களுக்கு எதிராக இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்த கருத்துக்கள் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியினருக்குச் சாதகமாக அமையலாம் என ட்ரம்பின் ஆலோசகர்களும், குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க : ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: போராட்டக்காரரை கீழே தள்ளி மண்டையை உடைத்த காவலர்கள்