வாஷிங்டன் (அமெரிக்கா): வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில், ஜார்ஜியா மாகாண செயலாளருக்கு அதிபர் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவிக்குமாறு அழுத்தம் கொடுப்பது பதிவாகியுள்ளது.
ஜார்ஜியாவில் நடந்த தேர்தலில் தான் வெற்றி பெற்றதாக தொடர்ந்து குறிப்பிட்டு வந்த டிரம்ப், ஒருகட்டத்தில் ரஃபென்ஸ்பெர்கரிடம், "நீங்கள் மீண்டும் வாக்குகளை கணக்கிட்டீர்கள் என்று சொல்வதில் தவறில்லை" என்று கூறினார்.
அதற்கு ரஃபென்ஸ்பெர்கர், "அதிபரே, இதிலுள்ள சவால் என்னவென்றால், நீங்கள் வைத்திருக்கும் தரவு தவறானது" என்று அவர் பதிலளிப்பதை அதில் கேட்க முடிகிறது.
இதைத்தொடர்ந்து ஜார்ஜியா மாகாணத்தில் பதிவாக வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக கூறிய டிரம்ப், சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படுமென்று அலுவலரை எச்சரிக்கிறார்.
"அவர்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் அதைப் புகாரளிக்கவில்லை. அது ஒரு குற்றம்.
அதை நீங்கள் அனுமதிக்க முடியாது. இது உங்களுக்கும் உங்கள் வழக்குரைஞரான ரியானுக்கும் ஒரு பெரிய ஆபத்து" என்று ட்ரம்ப் கூறுவதாக ஒலிப்பதிவு உள்ளது.
அமெரிக்க அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஒலிப்பதிவு குறித்து இதுவரை வெள்ளை மாளிகை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.