சீனாவின் ஹூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ், கட்டுக்கடங்காமல் உலக முழுவதும் பரவி பெரும் பேரிடரை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை அந்நாட்டில் 23 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் எனத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், கரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்பதை அதிபர் ட்ரம்ப் உறுதியாக நம்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பு செயலர் கெய்லி மெக்கெனமி, "கரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்பதை அதிபர் ட்ரம்ப் உறுதியாக நம்புகிறார். அப்படி கூறியதற்கு அவர் துளிகூட வருந்தியதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஒக்லஹோமாவில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது பேசிய ட்ரம்ப் 'குங் ஃபூ' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அது ஒன்றும் இனவெறி வார்த்தை அல்ல. சீனாவிலிருந்து தான் கரோனா பரவியது என்பதை உணர்த்தவே அவர் அப்படிக் கூறினார்.
ஆசிய-அமெரிக்க சமூகத்தினரை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். கரோனா பரவியதற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிபர் ட்ரம்ப் கரோனா வைரஸை 'சீன வைரஸ்' என்று அழைத்தாக அமெரிக்க ஊடகங்கள் கூறி வருகின்றன. நியூயார்க் டைம்ஸ், ராய்டர்ஸ், சிஎன்என் போன்ற ஊடகங்கள் தான் கரோனா வைரஸுக்கு அவ்வாறு பெயர் சூட்டின" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவைத் தொடர்ந்து ஜப்பானுடன் மோதும் சீனா!