அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் 20க்கும் குறைவான நாள்களே உள்ளதால், இரு தரப்பினரும் தங்கள் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அதிபர் ட்ரம்பிற்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனால் ட்ரம்ப் - பிடன் ஆகியோருக்கு இடையே அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவிருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது. கரோனாவில் இருந்து ட்ரம்ப் குணமடைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 22ஆம் தேதி திட்டமிட்டபடி விவாதம் நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற முதல் விவாத நிகழ்ச்சியே பெரும் விமர்சனங்களை எழுப்பியது. ஜோ பிடனை ட்ரம்ப் பேசவிடாமல் தடுத்ததாகவும் அதிக முறை இடையூறுகள் செய்ததாலும் விவாதம் மிக மோசமாக இருந்தது என்றும் விமர்சனங்கள் எழுந்தது.
பொதுவாக அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே நடைபெறும் 90 விழுக்காடு விவாதம் 15 நிமிடங்களைக் கொண்ட ஆறு பாகங்களாகப் பிரிக்கப்படும். அதில் இரு தரப்பினருக்கும் முதலில் எவ்வித இடையூறுமின்றி இரண்டு நிமிடங்கள் வழங்கப்படும், அதைத்தொடர்ந்து விவாதம் நடைபெறும்.
இந்நிலையில், மூன்றாவது அதிபர் தேர்தல் விவாதத்தின்போது எந்த இடையூறுமின்றி ஒருவருக்கு அளிக்கப்படும் இரண்டு நிமிடங்களின்போது எதிர் தரப்பினரின் மைக் அணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ட்ரம்ப்பின் பரப்புரை மேலாளர் பில் ஸ்டீபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அத்தகைய அதிகாரத்தை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மாற்றத்துடன் விவாதத்தை தொடர முடிவெடுப்பது என்பது விவாதத்தை ஒருங்கிணைக்கும் குழுவுக்கு அதிக அதிகாரத்தை கொடுப்பதற்கு ஒப்பானதாகும்" என்று கூறினார்.
மேலும், மூன்றாவது விவாதத்தில் விவாதிக்க அளிக்கப்பட்டுள்ள தலைப்புகள் பெரும்பாலும் முதல் விவாதத்திலேயே விளக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ள அவர், இந்த விவாதத்தில் வெளியுறவுக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
இதையும் படிங்க: அழகிய பெண்களை முத்தமிட ஆசை - பரப்புரையில் ட்ரம்பின் கிளுகிளுப்பு பேச்சு!