கரோனா பெருந்தொற்று பாதிப்பு அமெரிக்காவை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. வரும் நவம்பர் மாதம் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கரோனா பெருந்தொற்றை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையாண்ட விதம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் முடிவை மாற்றக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் 244ஆவது சுதந்திர தின உரையில் இந்த விவகாரத்தை கையிலெடுத்த அதிபர் ட்ரம்ப், கரோனா விபத்திற்கான காரணத்தை சீனா மீது சுமத்தியுள்ளார். தனது உரையில் அவர், உலகில் எந்த நாடும் தயார் செய்யாத அளவிற்கு வென்டிலேட்டர்கள், முகக்கவசங்கள், அறுவை சிகிச்சைக்கான உபாகரணங்கள், கையுறைகள் ஆகியவற்றை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது. அதேவேளை, அமெரிக்கா இதுபோன்ற இடர்பாடுகளை சந்திக்கும் சூழலுக்கு கரோனாவின் பிறப்பிடமான சீனாதான் காரணம்.
சீனா கரோனாவை ரகசியமாக வைத்து மறைக்க முயற்சித்ததே காரணமாகும். சீனாவின் இந்த அலட்சியப் போக்கின் காரணமாக உலகின் 189 நாடுகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன என்றார்.
இதுவரை அமெரிக்காவில் கரோனா பாதிப்பின் காரணமாக சுமார் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்றால் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 571 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் குவைத் அரசு!