அமெரிக்காவில் கரோனா வைரஸ் தாக்கம் வரலாறு காணாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அங்கு வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 8.60 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதாரத் தாக்கத்தை காட்டிலும் பொருளாதார தாக்கம்தான் அதிபர் ட்ரம்பிற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவுக்கு பின் இதுவரை இரண்டரைக் கோடிக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க ட்ரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
இதுதொடர்பாக ட்ரம்ப் பேசுகையில், ”நோய் பாதிப்பில்லாதவர்கள் தக்க முன்னெடுப்புகள், சமூக இடைவெளியுடன் இயங்க வழிவகை செய்யப்படும். பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு விரைந்து குணமாக்கப்படுவார்கள்.
நோய் தாக்கத்திலிருந்து முற்றிலும் விடுபடும் நபர்கள், விரைவில் இயல்பு நிலையில் சமூகத்தில் இயங்க அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவின் மிகச் சிறந்த எண்ணெய் நிறுவனங்கள் வீழ்ச்சியடைய ஒருபோதும் விடமாட்டோம், மின்சக்தித் துறை செயலரிடம் இந்தச் சூழலை சமாளிக்கும் விதமானத் திட்டங்களை வகுக்க உத்தரவிட்டுள்ளேன். விரைவில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு ஈரான் அஞ்சாது!