கரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் இதனைத் தடுக்க மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனித உடலில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவினால் அது முதலில் அவர்களது நுரையீரலை முழுமையாகப் பாதிப்படைய செய்து பின்பு இதயம், சிறுநீரகம் என அனைத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும்.
அப்படித்தான், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு முதலில் நுரையீரல் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மருத்துவரின் சவாலான அறுவை சிகிச்சை மூலம் தற்போது முழுமையாக குணமடைந்த அப்பெண் கரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.
சாதித்துக்காட்டிய இந்திய வம்சாவளி
அப்பெண்ணுக்கு முதலில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அவர் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டுவந்துள்ளார். பின்னர் அவரைச் சோதித்ததில் அவரது நுரையீரல் முழுமையாகப் பாதிப்படைந்திருந்தது.
இதைத்தொடர்ந்து, அவரைக் காப்பாற்ற களமிறங்கினார் இந்திய வம்சாவளி மருத்துவர் அன்கிட் பாரத். கரோனா தொற்று பீடித்திருந்த அப்பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும், இல்லாவிட்டால் அவரது உயிருக்கே ஆபத்து என்ற நிலை உருவானது!
கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள அப்பெண்ணின் நுரையீரலை மாற்றும் அறுவை சிகிச்சை செய்வது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல; மிகவும் சவாலானது. அனைத்தையும் உணர்ந்த மருத்துவர் அன்கிட் பாரத் தான் கற்ற மொத்த வித்தையையும் இறக்கினார்.
மிகவும் கடுமையான சூழலுக்கிடையே தெளிவாகச் செயல்பட்டு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து அப்பெண்ணை பிழைக்கச் செய்துள்ளார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் நடைபெற்ற முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இதுதான் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.
"இது மிகவும் சவாலான அறுவை சிகிச்சையாக இருந்தது. எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒன்றை நான் செய்ததே இல்லை!" எனச் சாதித்த உணர்வோடு தெரிவித்த அன்கிட் பாரத்தின் கண்ணில் மின்னியது ஒரு நம்பிக்கைக் கீற்று.
இதையும் படிங்க: 22 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றுகிறது ஜெர்மன் விமான நிறுவனம்!