அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். சமீபத்தில் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடனும் நேருக்கு நேர் மோதிய முதல் விவாதமானது செப்டம்பர் 29ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. அனல் பறக்கும் விதமாக 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்தில், ஃபாக்ஸ் நியூஸின் கிறிஸ் வாலஸ் நடுவராக மத்தியில் இருந்து கேள்வி கேட்க, மாறி மாறி வார்த்தைகளால் இருவரும் தங்களைத் தாக்கிக் கொண்டனர்.
இந்த விவாதத்தின்போது ஜோ பிடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு கோமாளி என்று கூறி விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை நான் கோமாளி எனக் கூறயிருக்க கூடாது என ஜோ பிடன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ட்ரம்பை ஒரு கோமாளி என்று அழைத்ததற்கு பதிலாக, அவரது செயல்கள் கோமாளி போல் உள்ளது என்று நான் சொல்லியிருக்க வேண்டும். விவாதம் மிகவும் கடினமாக இருந்தது. அவருடன் சரிக்கு சமமாக கூச்சலிடும் போட்டியில் கலந்துகொள்வதன் மூலம் விவாதத்தின் செயல்முறையை மேலும் இழிவுபடுத்த நான் விரும்பவில்லை. நான் உங்களுடன் மிகவும் நேர்மையாக இருப்பேன்" எனத் தெரிவித்தார்.
மேலும், அதிபர் ட்ரம்ப் கரோனாவிலிருந்து பூரண குணமடைந்தால் மட்டுமேதான், இரண்டாவது விவாதம் நடைபெறும் என ஜோ பிடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள அக்டோபர் 15 மற்றும் அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் இரண்டு விவாதங்கள் நடைபெற உள்ளன.