மெக்சிகோ நாட்டின் தெற்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலையொட்டியுள்ள ஒக்ஸாகா மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் வெவ்வேறு சம்பவங்களில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சலினா க்ரூச் நகரில் அமைந்துள்ள அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளிக்கு மிக அருகே உள்ள ஹுவாடுல்கோ நகரில் சொகுசு விடுதி ஒன்றை நடத்திவரும் மரியா கொன்சாலெஸ் கூறுகையில், "நிலநடுக்கம் ஏற்படுவதற்கும் முன்பாகவே ஊழியர்களையும், விருந்தினர்களையும் வெளியேற்றிவிட்டோம். ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்டு 45 நிமிடங்கள் கழித்தே நாங்கள் உள்ளே சென்றோம்.
நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதிர்வலைகளை எங்களால் உணர முடிந்தது. அது மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது" என்றார்.
அந்நாட்டுத் தலைநகர் மெக்சிகோ நகரிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் உணரப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், 30-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் அந்நகர அலுவலர்கள் தெரிவித்தனர்.
மெக்சிகோவில் தெற்கு பசிபிக் கரை அருகே சுமார் 26 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம், கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் அதன் முழு வீரியத்தையும் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!