நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
இதனிடையே ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 76ஆம் அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று எதிர்த்து உலகம் போராடி வருகிறது. இதனால் உயிரிழந்த அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
முதல் டிஎன்ஏ தடுப்பூசி
உலகில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், இந்திய நாட்டில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய கோரிக்கை விடுக்கிறேன். உலகின் முதல் டிஎன்ஏ (DNA) தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது. இதனை 12 வயதிற்கு மேற்பட்டோர் செலுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவின் எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசி சோதனைகள் கடைசி கட்டத்தில் உள்ளன. தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா வழங்கிவருகிறது. ஜனநாயகத்தின் தாய் என்ற அழைக்கப்படும் நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மை எங்களின் வலுவான ஜனநாயகத்திற்கு அடையாளம்"
ஆப்கன் குறித்து மோடி
"பிற்போக்கு சிந்தனைகளையும், பயங்கரவாதத்தையும் அரசியல் கருவியாக பயன்படுத்தும் நாடுகள், இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனை எதிர்த்து நாம் போராட வேண்டும். ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை மற்ற நாடுகள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள், குறிப்பாக சிறுபான்மை மக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டியது நமது கடமை. அந்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு நாம்தான் பொறுப்பு" என்றார்.
இதையும் படிங்க: பைடன் அடித்த ஜோக்; சிரிப்பு மாளிகையாக மாறிய வெள்ளை மாளிகை!