ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம், நாற்கரக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு (குவாட் நாடுகள்), மூன்று நாடுகளுடனான இருதரப்புச் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நரேந்திர மோடி புதன்கிழமை அமெரிக்கா சென்றார்.
அங்கு அவருக்கு அந்நாட்டு உயர் அலுவலர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், அங்கு கூடியிருந்த அமெரிக்கவாழ் இந்தியர்கள் மோடியை வாழ்த்தி கோஷமிட்டு மூவர்ணக் கொடியை கையில் ஏந்தியபடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற உலகளாவிய கரோனா தடுப்பு உச்சி மாநாட்டில் நரேந்திர மோடி காணொலி வாயிலாகக் கலந்துகொண்டார்.
அப்போது அவர், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் 95 நாடுகளுடனும், ஐக்கிய நாடுகள் அமைதிப் படையுடனும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை உலக நாடுகள் ஒன்றுக்கொன்று அங்கீகரிப்பதன் மூலம் பன்னாட்டுப் பயணம் எளிதாக்கப்பட வேண்டும்" என்றார்.
இந்த நிலையில் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வாஷிங்டன் வந்தடைந்தேன். இரண்டு நாள்களில் ஜோ பைடன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோரைச் சந்திக்கிறேன்.
மேலும், நாற்கர கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களுடன் இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து கலந்துரையாட உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது மற்றொரு ட்வீட்டில், "அன்பான வரவேற்பு அளித்த வாஷிங்டனில் உள்ள இந்திய சமூகத்திற்கு மிக்க நன்றி. நமது சமூகமே நமது வலிமை. உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் தனிச் சிறப்பான செயல்பாடு பாராட்டத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார் மோடி.
இதையும் படிங்க: 'மனசாட்சியின்றிச் செயல்படும் ஊடகங்கள்; அரசுக்கு எதிராகச் செய்தி வெளியிட அச்சம்!'