வாஷிங்டன்: அமெரிக்கா முழுவதும் அவசரகால பயன்பாட்டிற்காக ஃபைசரின் கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த தடுப்பூசி 24 மணி நேரத்திற்குள் மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "அமெரிக்கா முழுவதும் கரோனா வைரஸிற்கான முதல் தடுப்பூசி 24 மணி நேரத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். சீனாவிலிருந்து வந்த இந்த தொற்றுநோய் அமெரிக்காவில் முடிவடையவுள்ளது.
இன்று நம் நாடு மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளது. வெறும் ஒன்பது மாதங்களில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை மக்களுக்கு வழங்கியுள்ளோம். இது வரலாற்றில் மிகப்பெரிய அறிவியல் சாதனைகளில் ஒன்று. இது மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, விரைவில் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு தடுப்பூசியை தயாரித்து மக்களுக்கு வழங்குவேன் என்று உறுதியளித்தேன். அதில் வெற்றியும் பெற்றேன்.
ஃபைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். இவை அனைத்தையும் சாத்தியமாக்கிய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்றி " என்றார்.
இதையும் படிங்க: நாடுகளைப் பொறுத்தே விலை நிர்ணயிக்கப்படும் - ஃபைசர் நிறுவனம் அதிரடி