உலகம் முழுவதும் கரோனா வைரஸின் பாதிப்பு குறைந்தப்பாடில்லை. கரோனா பாதிப்புகள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 6 லட்சத்தை நெருங்கியுள்ளது.
அங்கு தடுப்பூசி செலுத்து பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பைசர் தடுப்பூசியை 12 வயது முதல் 15 வயதினருக்கும் அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது.
இதற்காக, இந்தக் குறிப்பிட்ட வயதிலுள்ள தன்னார்வலர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.